Wednesday, June 22, 2011

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 -
ல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடியே நடை பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி tie -ல் முடிந்து சரித்திரத்தில் இடம் பெற்றது. இன்று நடை பெற்றது போல் இருக்கிறது. அதனுடைய வெள்ளி விழா வருடத்தில் அந்த போட்டியை நினைவு கூற விரும்புகிறேன்.

சங்கரன்கோவிலில் பத்தாவது படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஆன முதல் டெஸ்ட் பந்தயம். புதன் கிழமை செப்டம்பர் 18 - ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடை பெறுவதால் ஒரு திருப்தி. இந்தி கம்மேண்டேரி-யின் தலைவலி விட்டு கொஞ்சம் தமிழ் கம்மேண்டேரி கேட்கலாம். பந்துகளை ஸ்ரீக்காந்த் மடக்கி (pull ) அடிப்பதையும், விரட்டுவதையும் (drive ) காது குளிர கேட்கலாம். ராமமூர்த்தி என்று ஒரு IAS அதிகாரியின் கம்மேண்டேரி அருமையாக இருக்கும். வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாதது கொண்டும், புதன், வியாழன், வெள்ளி விடுமுறை போட்டு கமெண்டரி கேட்கும் அளவுக்கு ஆசை இருந்தாலும் சுதந்திரம் இல்லாதது கொண்டும், முதல் மூன்று நாள் ஆகாஷ வாணி செய்திகளிலும் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் உள்ள transistor -ல் அவ்வப்போது கமெண்டரி கேட்பதிலும் ஓடியது.

முதல் இன்னிங்ஸ்

toss ஜெயித்த ஆலன் பார்டர், பாட்டிங் தேர்ந்தெடுத்தார். பூன் சதம் அடித்து ஆஸ்திரேலியாவிற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த டீன் ஜோன்ஸ் சென்னையின் கொளுத்தும் வெயிலில் துவண்டு போய், பல கட்டங்களில் அவஸ்தைப்பட்டு வரலாறு காணாத ஒரு 210 எடுத்தார். அப்போது நான் டீன் ஜோன்ஸ் மற்றும் மார்டின் குரோவ் ஆகியோரின் பரம ரசிகன். இந்திய முதல் மூன்று நாள் கண்டிப்பாக தோல்வி என்ற நிலமையில் இருந்தது. இருந்தாலும் டீன் ஜோன்ஸ்-இன் 210 - ஐ ரகசியமாக ரசித்தேன். ஸ்ரீக்காந்த் bruce reid -ஐ விரட்டி விரட்டி அடித்து சென்னை சூட்டை அதிகரித்தார். கபில் தேவ் ஒரு அதிரடி 119 அடித்து follow -on - ஐ தவிர்த்தார். ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலை எடுத்தது.


இரண்டாவது இன்னிங்ஸ்

நான்காவது நாள் பாட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலியா, இறுதியில் ஐந்து விக்கட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 347 ரன்கள் புன்னிலையில் இருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பார்டர் சவாலுடன் டிக்ளர் செய்தார்.

87 ஓவர்களில் சரியாக 348 ரன்கள் எடுத்தல் வெற்றி. நான்கு ரன்கள் ரன் ரேட் தேவை. கொஞ்சம் மெதுவாக தொடங்கிய ஆட்டம் இந்தியா டிராவுக்கு ஆடும் என்ற தோற்றத்தை கொடுத்தது. கவாஸ்கரும் அமர்நாத்தும் 103 ரன்கள் partnership எடுத்து கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார்கள். அசாருதின் ஒரு 42 ரன் எடுத்து கொஞ்சம் பலம் கூட்டினார்,

கபில்தேவ் ஆர்டரில் முன்னாள் வந்து உடனே அவுட் ஆனார். சந்திரகாந்த் பண்டிட்டும் சாஸ்திரியும் 290 வரை கொண்டு வந்தார்கள். சேதன் ஷர்மா நன்றாக ஆடி 331 வரை கொண்டு போனார். கிரண் மோர் தங்க வாத்து முட்டை வாங்கினார். ஷிவ்லால் யாதவ் எதிர் பாராத வகையில் ஒரு சிக்ஸர் அடித்தார். நான்கு ரன் எடுக்க வேண்டிய நேரத்தில் ஷிவ்லால் யாதவ் போல்ட் ஆகி கடைசி விக்கட் ஆன மணிந்தர் சிங் இறங்கினார். இரண்டு பந்துகளை சமாளித்தார்.

கடைசி ஓவர். மாத்தியூஸ் வீசுகிறார். இரண்டாவது பந்தில் சாஸ்திரி இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்து சம நிலைக்கு கொண்டு வந்தார். நான்காவது பந்தை சமாளித்த மணிந்தர், ஐந்தாவது பந்தை காலில் வாங்கினார். LBW கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியில் குதிக்க, இந்த டெஸ்ட் மாட்ச் சரித்திரத்தில் இடம் பெற்றது.

கடைசி நாள் மாத்திரம் தொலைக்காட்சியில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிட்டியது. சங்கரன் கோவில் தெற்கு ரத வீதியில் ரவி என்று ஒரு வக்கீல் டிவி வைத்து இருந்தார். 20 to 30 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு பார்த்தோம். ரவி பெருந்தன்மையாக அனுமதித்தார். அந்த அனுபவம் இன்றும் நினைவில் நிற்கிறது. நான்கைந்து வருடங்களுக்குப் பின் ஒரு முறை அவரை ஒரு இரயில் பயணத்தில் பார்த்தேன். அவருக்கு நினைவில்லை. ஆனாலும் என் நன்றியை தெரிவித்தேன்.

1986 -ல் இந்த டெஸ்ட் மேட்ச் tie ஆன போது, இதற்கு முன் tie ஆன டெஸ்ட் 25 வருடங்களுக்கு முன்பாகும் (1961 ) ஆண்டு செய்தி தாள்களில் வந்து இருந்தது. அடேங்கப்பா என்று பிரமிப்பாக இருந்தது. இப்போது, இன்னொரு 25 வருடங்கள் போய் விட்டன.

ஒரு இனம் புரியாத சோக உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.









2 comments:

  1. Good recollection of an historic test, sathya.I too remember it.very touchingly written.

    ReplyDelete
  2. The irony is, India were at the receiving end in this test for most of the time, yet, we made it so close and tied. I too had the rare opportunity to watch this match at my chittappa's house. I can still connect to the deflated feeling when maninder got out lbw. He tried his best to gesture that the ball was going away (there was still one ball left in the game when he got out)!!!

    ReplyDelete